

அமராவதி: ஆந்திராவில் நேற்று காலை டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், நிர்மல் பகுதியில் இருந்து தனியார் சொகுசு பேருந்து 41 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. ஆந்திர மாநிலம், மார்க்காபுரம் மாவட்டம், ராயவரம் பகுதிக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்தபோது, பேருந்தை ஒரு டிப்பர் லாரி முந்திச் செல்ல முயன்றது. அப்போது டிப்பர் லாரியின் டீசல் டேங்க் மீது பேருந்து மோதியதில் பேருந்தும் லாரியும் தீப்பற்றி எரிந்தன.
உடனே பேருந்தின் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் பேருந்தில் இருந்து குதித்தும், இறங்கியும் காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் பின் இருக்கைகளில் இருந்தவர்களால் உடனே வெளியில் வர முடியவில்லை. இதனால் பேருந்துக்குள் சிக்கிய 7 பெண்கள், 5 மாத குழந்தை உட்பட 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலின் பேரில் போலீஸாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் படுகாயம் அடைந்த 27 பயணிகள் மார்க்காபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பேருந்து புறப்பட்டபோதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
எர்ரகொண்ட பாளையத்தில் பேருந்தை நிறுத்தி, சுமார் ஒரு மணி நேரம் பழுது பார்த்துள்ளனர். பிறகு பேருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விபத்து நேர்ந்துள்ளது. மார்க்காபுரம் பேருந்து விபத்தில் சிக்கிய ரமாதேவி தனது மகன் மனோகரை பேருந்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டு காப்பாற்றிய நிலையில், தான் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தாய்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
ஆந்திர அரசு நிதியுதவி: காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.
பிரதமர் மோடி இரங்கல்: இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.