

மக்களவை எம்.பி. கங்கனா ரனாவ
புதுடெல்லி: இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியைச் சேர்ந்த மக்களவை எம்.பி.யான கங்கனா ரனாவத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் ராமர் கோயிலே கட்டக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கோயில் கட்டப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ராமர் கோயில் நன்கொடை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகளில் திருட்டு, முறைகேடுகள் நடந்தது மட்டுமல்லாமல், லட்சக் கணக்கான மக்களின் நம்பிக்கையும் திருடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முதலில் கோயிலே வேண்டாம் என்று கூறியவர்கள், இப்போது அந்தக் கோயிலை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றனர். பல ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டுமானத்தை எதிர்த்து வந்தது காங்கிரஸ் கட்சி. அதே காங்கிரஸ் கட்சி, தற்போது கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் லாபம் அடைய முயல்கிறது.
சனாதனம், கலாச்சாரம், மக்கள் நம்பிக்கை, நாட்டின் நாகரீகம், பண்பாட்டை கட்டிக் காப்பதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது.வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக எப்போதும் செயல்படாது. காங்கிரஸ் கட்சியின் அரசியலையும், அதன் உண்மைத் தன்மையையும் மக்கள் உணர்ந்துகொண்டு விட்டனர். இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.