யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் வரி விதிப்பு மற்​றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா​ மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007, வருமான வரிச்சட்டம் 2025, நிதிச் சட்டம் 2026 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில், வரி விதிப்பு மற்​றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா​ மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை மக்களவையில் இன்று (ஆக. 6) தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்த ஆளும் கட்சி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மசோதா விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

யுபிஐ மற்றும் பிற மின்னணு கட்டண முறைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்களை அனுமதிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007-ல் திருத்தங்களை மேற்காள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

மின்னணு கட்டண முறைகளுக்கு வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் சட்ட விதியை இந்த திருத்தம் நீக்கும்.

இதன் மூலம், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பிறசேவை வழங்குநர்களால் கட்டணம் விதிக்க முடியும். இந்த கட்டணம், தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இருக்காது என்றும், நுகர்வோர் - நிறுவனம், நிறுவனம் - நிறுவனம் இடையேயான பணபரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” - ராகுல் காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in