“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” - ராகுல் காந்தி

நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆவேசம்
“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” - ராகுல் காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற இருந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தனது குரலை தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா நகரிலும், உத்தராகண்ட்டின் டேராடூனிலும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியை நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஆகஸ்ட் 8-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தார்.

பிரயாக்ராஜில் உள்ள காயஸ்தா பாடசாலா அறக்கட்டளைக்குச் சொந்தமான மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அனுமதியை காயஸ்தா பாடசாலா அறக்கட்டளை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையின் பொறுப்புத் தலைவர் ஜிதேந்திரநாத் சவுத்ரி, “காயஸ்தா பாடசாலா கல்லூரி மைதானத்தை விளையாட்டு மற்றும் கல்விச் செயல்பாடுகளைத் தவிர வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்று கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், மைதானத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால், பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு அது பாதுகாப்பானது அல்ல. எனவே, அனுமதி ரத்து செய்யப்படுகிறது” என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கட்டண உயர்வு மற்றும் இடங்கள் குறைப்பு ஆகியவற்றுக்கு எதிராக அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகிறார்கள். மாணவர்களின் குறைகளைக் கேட்பதற்குப் பதிலாக நிர்வாகம் அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்து வருகிறது.

இளைஞர்களின் குரலை ஒடுக்குவதே மோடி அரசின் கொள்கையாக உள்ளது. கேள்வி கேட்டால் தடியடி, போராட்டம் நடத்தினால் வழக்குகள், குரல் எழுப்பினால் பெல்லட் குண்டுகள் - இதுதான் நிலைமை.

மாணவர்களின் கருத்துக்களைக் கேட்க நான் பிரயாக்ராஜ் வர முடிவு செய்ததில் இருந்தே எனது நிகழ்ச்சியைத் தடுக்க நிர்வாகம் எல்லா வழிகளிலும் முயன்று வருகிறது.

மாணவர்களின் குரல் ஒலிப்பதைக் கண்டு கூட அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பது தெளிவாகிறது. நான் மாணவர்களுடன் நிற்கிறேன். அரசு எவ்வளவுதான் முயன்றாலும், அவர்களுக்காக நான் குரல் கொடுப்பதை தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” - ராகுல் காந்தி
தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: பாலியல் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in