பாஜக மூத்த தலைவர் அத்வானி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்

பாஜக மூத்த தலைவர் அத்வானி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி உடல்நிலை குறைபாடு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அத்வானியின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘மார்பு தொற்று காரணமாக அத்வானி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், நரம்பியல் துறை மூத்த மருத்துவர் வினித் சூரியின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். இதையடுத்து, அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக நட்டாவும் கூறினார்.

1927-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கராச்சியில் பிறந்த அத்வானிக்கு தற்போது 98 வயதாகிறது. 1990-ல் தான் மேற்கொண்ட ராம ரத யாத்திரை மூலம் பாஜகவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் அத்வானி. 2002 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்த அத்வானி, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவணனுடன் 30 அடி உயர ‘கரப்பான்பூச்சி’ உருவ பொம்மையையும் எரிக்க முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in