டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவணனுடன் 30 அடி உயர ‘கரப்பான்பூச்சி’ உருவ பொம்மையையும் எரிக்க முடிவு

டெல்லி ராம்லீலா மைதானத்தில்
ராவணனுடன் 30 அடி உயர ‘கரப்பான்பூச்சி’ உருவ பொம்மையையும் எரிக்க முடிவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவணன் உருவபொம்மையுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மையையும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால், ஆளும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக் குறியீடாக கரப்பான்பூச்சி மாறியுள்ளது.

தசரா பண்டிகையின்போது டெல்லியில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த உருவபொம்மைகளுடன் 30 அடி உயரமுள்ள கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை, வடமேற்கு டெல்லியின் பிதாம்புரா பகுதியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வை நடத்தும் 'ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி' எடுத்துள்ளது.

இது குறித்து ஸ்ரீகேசவ் ராம்லீலா கமிட்டியினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கரப்பான் பூச்சி என்பது அழுக்கையும் அசுத்தத்தையும் குறிப்பதாகும். தூய்மை இந்தியா, தூய்மை டெல்லி ஆகிய பிரச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீயவற்றின் மீது நன்மையின் வெற்றியை நிலைநாட்டவும் இந்த கரப்பான்பூச்சி உருவ பொம்மை எரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபியினர் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தலைநகர் டெல்லியின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு அந்தக் கமிட்டியின் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான அசோக் கோயல் கூறும்போது, ’உருவ பொம்மை எரிப்பு நிகழ்வில் கரப்பான்பூச்சியை சேர்த்ததற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் புகார்: இதனிடையே, சிஜேபியின் போராட்டத்தால் டெல்லியில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இத்தகைய போராட்டங்களும் அதனால் விதிக்கப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் சந்தைக்குச் செல்வதைத் தடுத்து, சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக பாலிகா பஜார் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லியின் முக்கிய அமைப்பான ‘சேம்பர் ஆப் டிரேட் அண்ட் இண்டஸ்டிரீஸ்’ அமைப்பு சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில், டெல்லி போராட்டத்தால் வியாபாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தீபாவளி பண்டிகை வரை போராட்டங்களுக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில்
ராவணனுடன் 30 அடி உயர ‘கரப்பான்பூச்சி’ உருவ பொம்மையையும் எரிக்க முடிவு
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in