

ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன்
புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு கலவரத்தின்போது உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது மதக்கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்த கலவரத்தின் போது வீட்டில் இருந்து பொருட்கள் வாங்கச் சென்ற உளவுத் துறை (ஐபி) அதிகாரி அங்கித் சர்மா ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பிறகு ஒரு சாக்கடை கால்வாயில் இருந்து அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் உள்ளிட்ட 11 பேர் மீது கடந்த 2024, மார்ச்சில் டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தாஹிர் உசேன் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என கூடுதல் அமர்வு நீதிபதி பிரவீன் சிங் கடந்த 13-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.
முன்னதாக நடைபெற்ற இறுதி வாதத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை கோரியது.
அரசு வழக்கறிஞர் மதுகர் பாண்டே தனது வாதத்தில், “இந்தக் கொலை திட்டமிட்டு, இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளது. சர்மாவின் உடலில் 51 காயங்கள் இருந்தன. அவற்றில் 7 காயங்கள் மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை. சர்மாவின் கழுத்தில் துணியை கட்டி இழுத்துச் சென்று அவரை சாக்கடையில் வீசியுள்ளனர்” என்றார்.