ஆசிய விளையாட்டு போட்டியின் கோல்ஃப் பிரிவில் இந்திய வீராங்கனையான பிரணவி அர்ஸ் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், ஆசிய விளையாட்டு வரலாற்றில் கோல்ஃப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்தார்.
மைசூருவைச் சேர்ந்த 23 வயதான பிரணவி, மூன்றாவது துளையில் எதிர்பாராத விதமாக மூன்று போகி அடித்துச் சிரமப்பட்டார். இதனால் தனது முந்தைய நாள் 3 ஸ்டோக் முன்னிலையை இழந்த அவர், அதிலிருந்து மீண்டுவர 3 பர்டிகளை பதிவு செய்தார்.
இறுதிச் சுற்றில் ஈவன்-பார் 70 ஸ்கோருடன், நான்கு நாட்களில் மொத்தம் 15-அண்டர் 265 என்ற கணக்கில் போட்டியை நிறைவு செய்து, மற்ற போட்டியாளர்களை விட ஒரு ஸ்டோக் முன்னிலையில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் பிரணவி அர்ஸ்.
அதே வேளையில் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இதில் இறுதிச் சுற்றில் 6, 10 மற்றும் 13-வது துளைகளில் பிரணவி பர்டிகளைப் பதிவு செய்தது முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணியில் அதிதி அசோக், தீக் ஷா தாகர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதிதி அசோக், தொடர்ச்சியாக 5 பர்டிகளை அடித்து, ஒரு டபுள் போகி மற்றும் ஒரு போகி ஆகியவற்றுடன் தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டார்.
தனிநபர் பிரிவில் அதிதி அசோக் ஒட்டுமொத்தமாக 282 புள்ளிகளுடன் 14-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். தீக்ஷா 23-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். அணிப் பதக்கங்களைத் தீர்மானிக்க இரண்டு சிறந்த வீராங்கனைகளின் புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி இந்தியா 546 புள்ளிகளுடன் நிறைவு செய்து 2-வது இடம் பிடித்தது.