என்டிஏ எம்.பிக்கள் கூட்டம்
“மக்களுக்கு சட்டங்கள் சுமையாக இருக்கக் கூடாது!” - என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: “எந்தவொரு சட்டத்தாலும், விதிகளாலும் எந்த அப்பாவி இந்தியரும் துன்புறுத்தலையோ அல்லது சிரமத்தையோ சந்திக்கக் கூடாது. சட்டங்கள் எப்போதும் சாதாரண மக்களின் வசதிக்காக இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லியில் இன்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.
என்டிஏ எம்.பி.க்கள் கலந்துகொண்ட கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.
சட்டங்கள் யாருக்கும் சுமையாக இருக்கக் கூடாது, மக்களின் வசதிக்காக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவை அமைப்பை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும், மக்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல. எந்தச் சட்டமும் மக்களைத் துன்புறுத்தும் வகையில் இருக்கக் கூடாது.
வளர்ச்சிப் பணிகளை மூன்று மடங்கு வேகத்தில் விரைவுபடுத்தவும், இளைஞர்களை விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளுடன் இணைக்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், சமீபத்திய பிஹார் தேர்தலில் என்டிஏ பெற்ற மகத்தான வெற்றிக்காக பிரதமர் மோடி பாராட்டப்பட்டார்” என்று கிரண் ரிஜிஜு கூறினார்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பாஜக தலைவரான ஜே.பி. நட்டா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநிலங்களவை உறுப்பினர்களான ஜேடியு தலைவர் சஞ்சய் ஜா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்தனர்.
