

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில், தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துந்துள்ளதாகவும், பெரும்பாலான உயிரிழப்பு வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தரவுகளை வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கடந்த ஜனவரி 29ம் தேதி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் அளித்துள்ளார். இதன்படி 2021 முதல் 2025 வரை வெளிநாடுகளில் உயிரிழந்த இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 37,740-ஐ எட்டியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.
2021ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 8,234 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். 2022-ல் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,614-ஆக குறைந்த நிலையில், அதன் பிறகு ஆண்டுதோறும் உயிரிழப்புகள் சீராக அதிகரித்து, 2023-ல் 7,291 ஆகவும், 2024-ல் 7,747 ஆகவும், 2025-ல் 7,854 ஆகவும் உயர்ந்துள்ளன.
இந்த உயிரிழப்புகளில் 86 சதவீதத்திற்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளில்தான் நிகழ்ந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் முறையே 12,380 மற்றும் 11,757 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.