லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்ட இடம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி லத்தீப் பட்டை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
கடந்த 11-ம் தேதி குல்காமின் அக்ரான் பகுதியில் லத்தீப் பட் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். உமர் நிசார் தார் என்பவருடன் இணைந்து இந்த தாக்குதலை லத்தீப் பட் நடத்தியதாக பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, குல்காமின் லாரூ பைபாஸ் பகுதியில் உமர் நிசார் தார் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று (நவ. 18) லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அனந்தநாக் மற்றும் குல்காமில் நடந்த இருவேறு தாக்குதல்களிலும் லத்தீப் பட்டுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த தாக்குதல்களில், ஒரு காவலரும், சத்தீஸ்கரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.
லத்தீப் பட் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.15 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள மசூதி ஒன்றில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியான லத்தீப் பட் பதுங்கி இருப்பது குறித்த தகவல் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து மசூதியை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காவல் கண்காணிப்பாளர் அனாயத் அலி சவுத்ரி, “நாங்கள் அவனுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினோம். சரணடையுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் அவன் மறுத்துவிட்டான். அவன் மசூதிக்குள் பதுங்கி இருந்ததால் நாங்கள் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டோம்.
இது ஒரு பெரிய வெற்றி. அவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான். அவன் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, காஷ்மீரின் அமைதி, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று வந்தான்.” எனத் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் குறித்துப் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இந்த நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினர் ஒரு முன்மாதிரியான கட்டுப்பாட்டுடன் செயல்பட்டனர். மத வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தன்மையைக் காக்கும் அதே வேளையில், பயங்கரவாதியை மசூதி வளாகத்தில் இருந்து வெளியே வரச் செய்து துல்லியமாக அவனை சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவித்தார்.
குல்காமின் அஷ்முஜி பகுதியில் உள்ள க்ரேவான் சாடர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான லத்தீப் பட், தச்சுத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.