

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி: ராமர் கோயில் காணிக்கை திருட்டு குற்றச்சாட்டை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் 8 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் லவ்குஷ் மிஸ்ரா மற்றும் அனுகல்ப் மிஸ்ரா ஆகியோர் மைத்துனர்கள். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து காணிக்கையில் அதிகளவிலான பணத்தை திருடி பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். சாதாரண ஊழியர்களாக இருந்தவர்கள் திடீரென புதிய வாகனங்கள் வாங்கினர். இவர்களின் பண பரிமாற்றங்கள் மற்றும் சொத்துகளை ஆய்வு செய்ய வருமானவரித் துறையின் உதவியை அயோத்தி போலீஸார் நடத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு கும்பமேளா நடைபெற்ற போது, ராமர் கோயிலுக்கு அதிகளவில் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் வந்ததாகவும், அப்போது கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உதவியுடன் அதிக பணத்தை எடுத்ததாக கூறியுள்ளனர். கோயில் காணிக்கையை எண்ணும் பணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளனர்.
ராமர் கோயிலின் 4 உண்டியல்களில் பக்தர்கள் போடும் காணிக்கையை 14 பேர் கொண்ட குழுவினர் எண்ணியுள்ளனர். இவர்களில் 11 பேர் வங்கி ஊழியர்கள், 3 பேர் ராமர் கோயில் அறக்கட்டளை ஊழியர்கள்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் அவினாஷ் சுக்லா என்பவர், தான் திருடிய பணத்தை கவுசல்புரியில் தனது சகோதரர் அபிஷேக் என்பவருக்கு சொந்தமான யோகா மையத்தில் வைத்துள்ளார். அங்கு போலீஸார் சோதனை நடத்தி 4 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.89 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் டிரைவர் டினு யாதவ் வீட்டில் நடந்த சோதனையிலும் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.
15 நாட்கள் கால நீட்டிப்பு
ராமர் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கை முறைகேடு குறித்த விசாரணை விரிவடைவதால் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உ.பி. அரசு 15 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.