

பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன்
லக்னோ: "உத்தர பிரதேசத்தில் 2027ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பாஜக களம் காணும். இந்தத் தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லக்னோவில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று தோழமைக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் நிதின் நவீன் பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சி தனித்துத் தேர்தலைச் சந்திக்கும் முழு பலத்தைக் கொண்ட கட்சி என்றாலும், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.
உத்தர பிரதேசத்தை 'உத்தம பிரதேசமாக' மாற்றுவதே எங்கள் இலக்கு. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோரின் கூட்டுத் தலைமையின் கீழ், உத்தர பிரதேசம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. எங்களது தலைவர்கள் சேவை மனப் பான்மையோடு மக்களுக்காக உழைத்து வருகின்றனர்.
இந்த நல்லாட்சியின் அடிப்படையில், வரும் 2027 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் லக்னோ வந்த பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், வரும் தேர்தலுக்கான உத்திகளை வகுப்பது மற்றும் கூட்டணி கட்சிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அடுத்தடுத்து முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.