

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தினர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் லட்சுமண் சந்தா எனும் கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் சமீபத்தில் ஒன்று கூடி, தங்களின் பிள்ளைகளின் வருங்காலம் குறித்தும், கல்வி குறித்தும் ஆலோசனை நடத்தினர். இந்த கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகள் ஆவர். இவர்கள் நடத்திய ஆலோசனையின் இறுதியில் அனைவரது பிள்ளைகளையும் அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் எனவும், தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க கூடாது எனவும் ஒருமனதாக தீர்மானித்தனர்.
அரசு பள்ளிகளில் தான் நன்கு படித்த ஆசிரியர்கள், பிள்ளைகள் விளையாட மைதானம், அறிவியல் சோதனைக் கூடம் என பல்வேறு வசதிகள் உள்ளன. எனவே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்ததாக அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவி படிகலா லட்சுமி தெரிவித்துள்ளார்.