

பெங்களூரு: கர்நாடகாவில் காலியாகவுள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் காங்கிரஸின் வேட்பாளராக அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன் தினம் இரவு அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து கார்கே நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் பி.கே.ஹரிபிரசாத் ஆகியோருடன் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவுக்கு வந்தார்.
சிறிது நேரம் விதான சவுதாவை சுற்றி பார்த்தனர். பின்னர் கார்கே காங்கிரஸ் மூத்த தலைவர்களின் முன்னிலையில் சட்டப்பேரவை செயலாளரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கூறுகையில், “நாட்டின் மூத்த அரசியல் தலைவரான கார்கே மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு சட்டப்பேரவையில் உரிய பலம் இருப்பதால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள கார்கே போன்ற அறிவார்ந்த ஆளுமைகள் மாநிலங்களவையில் இருப்பது காலத்தின் தேவை ஆகிறது'” என்றார்.