

கொல்கத்தா: அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக அதிகரித்து வரும் அதிருப்தி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவில் பிளவு ஏற்படலாம் என்ற யூகங்களுக்கு மத்தியில், அக்கட்சியின் 23 எம்.பி.க்கள் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக சார்பில் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.
மம்தாவின் தோல்வியை தொடர்ந்து அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமார் 60 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். இதையடுத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரிதப்ரதா பானர்ஜி கைப்பற்றியது மம்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் திரிணமூல் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தனர். சிலர் கட்சியிலிருந்து வெளியேறினர். கவுன்சிலர்கள், கொல்கத்தா மேயரும் ராஜினாமா செய்தனர்.
திரிணமூல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தற்போது மேற்கு வங்கத்தை தாண்டி நாடாளுமன்றத்துக்கும் பரவுவதாக தெரிகிறது.
திரிணமூல் எம்பிக்கள் இடையேயும் தற்போது அதிருப்தி நிலவுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் செயல்பாடுகளில் எம்.பி.க்கள் பலர் மகிழ்ச்சி அடையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 23 எம்.பி.க்கள், அதிருப்தி எம்எல்ஏ.க்கள் குழுவுடன் தொடர்பில் இருப்பதாகவும், வரும் நாட்களில் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.