

புதுடெல்லி: தேர்தல்களில் வெளிப்படைத் தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என இண்டியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற இண்டியா கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் பேசும்போது, “தேர்தல் ஆணையத்தின் 'சிறப்பு தீவிர திருத்தப் பணி' (SIR) மூலம் நாடு முழுவதும் சுமார் 13.3 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இவிஎம் இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்கவில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் செய்வதில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கு முன்பு அவர்களுக்கு உரிய முன்னறிவிப்பும் காரணங்களும் சொல்லப்பட வேண்டும். முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களுக்கு எளிமையான பதிவு நடைமுறைகள் இருக்க வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும். தேர்தல்களில் வெளிப்படைத் தன்மையைப் பாதுகாக்க மீண்டும் பழைய வாக்குச்சீட்டு (Ballot Paper) முறைக்கே திரும்ப வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணமூல் காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான என்சிபி, சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே), ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக மற்றும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.