

புதுடெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக கேரளா என்ற மாநிலத்தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்றப்படும் என்று மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3-ன்படி மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளா மாநில பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, கேரள (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ மாநில சட்டப்பேரவைக்குக் குடியரசுத் தலைவர் பரிந்துரைப்பார்.
மசோதா தாக்கல்: கேரள மாநில சட்டப்பேரவையின் கருத்துகளைப் பெற்ற பிறகு மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும். பெயர் மாற்றம் தொடர்பான மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றும். இந்த நடைமுறைகள் முழுமை பெற்றவுடன், கேரளம் என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 8-வது அட்டவணை உட்பட அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தை, கடந்த 2023 - 2024-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
கடந்த 2016-ம் ஆண்டு குர்காவ்ன் என்ற பெயர் குருகிராம் என்று பெயர் மாற்றப்பட்டது. அதன்பின்னர், கேரளாவின் பெயரை கேரளம் என்றும், அகமதாபாத் பெயரை அமராவதி என்றும் ஹைதராபாத் என்ற பெயரை பாக்கியநகர் என்றும் அவுரங்காபாத் என்ற பெயரை சாம்பாஜி நகர் என்றும் பெயர் மாற்ற மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.