

‘ஒரு தேசத்தின் (மாநிலத்தின்) முகவரி அதன் சொந்த மொழியில் இருக்க வேண்டுமே தவிர, அடக்குமுறையாளர்கள் திணித்த உச்சரிப்பில் அல்ல. தாய்மொழியில் அழைக்கும்போது கிடைக்கும் கம்பீரமும் உரிமையும், ஆதிக்கவாதிகள் சூட்டிய பெயரில் ஒருபோதும் கிடைப்பதில்லை’ என்பது கேரள அரசின் நிலைப்பாடு.
‘கடவுளின் சொந்த தேசம்’ என்று உலகெங்கும் புகழப்படும் ஒரு மாநிலத்துக்கு, உண்மையிலேயே சொந்தமான பெயர் எது? மலையாள மண்ணின் மைந்தர்கள் நெஞ்சாரச் சொல்லும் ‘கேரளம்’ என்ற பெயரா? அல்லது ஆங்கிலேயர்கள் தங்கள் நாவுக்கு ஏதுவாகச் செதுக்கிக்கொண்ட ‘கேரளா’ என்ற பெயரா? - இதன் ஆழமான வரலாற்றுப் பின்னணியையும் சட்டப் பாதையையும் தெளிவாகப் பார்க்கலாம்.
வரலாற்றுப் பின்னணி
புராணக் கதைகளின்படி, விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பரசுராமர், 21 தலைமுறை சத்ரியர்களை அழித்த பின், ரத்தம் படிந்த தனது கோடரியைக் கடலை நோக்கி வீசியதாகவும், அதன் விளைவாக உருவான வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளுக்குட்பட்ட கடற்கரை நிலப்பகுதியே ‘கேரளம்’ அல்லது ‘கேரளா’ என்றும் கதைகள் நம்பப்படுகின்றன.
வரலாற்றுப்பூர்வமாக, கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசர் அசோகரின் இரண்டாம் பாறை மரபுக் கல்வெட்டில், மலபார் பகுதி ‘கேரளபுத்ரா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மொழியியல் சான்றுகள்
மொழி மரபு அடிப்படையில் மலையாளத்தில் கேரம் + ஆளம் = கேரளம் என்றே அழைக்கப்படுகிறது. அதாவது, ‘கேரம்’ என்பது தென்னை மரங்களையும், ‘ஆளம்’ என்பது நிலப்பகுதியையும் குறிக்கிறது. தென்னை மரங்கள் சூழ்ந்த நிலப்பகுதி என்பதால் இம்மாநிலம் கேரளம் என அழைக்கப்பட்டது. மூவேந்தர்களில் ஒருவரான சேரர்கள் ஆண்ட நிலப்பகுதி ‘சேரளம்’ எனப்பட்டு, பின்னர் ‘கேரளம்’ என உருமாறியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மலையாள - ஆங்கில அகராதியைத் தொகுத்த ஜெர்மானிய மொழியியல் வல்லுநர் ஹெர்மன் குண்டர்ட் தனது குறிப்பில், ‘கர்நாடகாவின் கோகர்ணத்துக்கும், தெற்கு முனையான கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியைக் குறிக்கும் ‘கேரம்’ மற்றும் ‘சேரம்’ ஆகிய கன்னடச் சொற்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது. ‘சேர்’ (இணைதல்) மற்றும் ‘அலம்’ (நிலம்) ஆகிய பண்டைய தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே இச்சொல் உருவானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் கேரளம் என்பதுதான் மாநிலத்தின் உண்மையான பெயர். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் உச்சரிப்பு வசதிக்காக ‘கேரளா’ என மாற்றினர்.
‘கேரளா’ உருவான அரசியல் சூழல்
கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தில் நவீன தெற்காசிய வரலாற்றின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சரத் பிள்ளை தனது நூலில் குறிப்பிடுகையில், ‘18-ஆம் நூற்றாண்டு முதல் 1950-கள் வரையிலான கேரளாவின் நவீன வரலாற்றை ஆய்வு செய்தால், அங்கு திருவிதாங்கூர் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல குட்டி அரசுகளும் ஜமீன்களும் இருந்தன.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஏராளமான தமிழர்கள் இருந்து, சமஸ்தானத்தின் நிர்வாகத்திலும் வரி வசூலிப்பிலும் ஆதிக்கம் செலுத்தினர். 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூரில் எழுந்த மலையாளி தேசிய உணர்வு, ‘நிலப்பரப்பு சார்ந்த அடையாளத்தை விட மொழி மற்றும் கலாச்சாரத்தை’ முன்னெடுத்தது.
‘மலையாளி’ என்ற மொழி அடையாளம், அரசுப் பணிகளைப் பெறவும் தமிழர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஒரு கருவியாகப் பயன்பட்டது. தமிழ் பிராமணர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகவும், மாநிலத்துக்குள் அந்நியர்களாகவும் மலையாளி பிராமணர்கள் (நம்பூதிரிகள்) கருதினர். மலையாளம் பேசும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வாதம் 1920-களில் ‘ஐக்கிய கேரளா’ அல்லது ‘ஐக்கிய கேரள இயக்கத்தால்’ முன்னெடுக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 1949-இல் ‘திருவிதாங்கூர் - கொச்சி’ மாநிலமாக உருவானது. சையத் ஃபசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி ‘கேரள மாநிலம்’ உதயமானது. மலபார் மாவட்டம், காசர்கோடு தாலுகா ஆகியவை புதிய மாநிலத்தோடு இணைக்கப்பட்டன. திருவிதாங்கூர் பகுதியிலிருந்த தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டுத் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன.
பெயர் மாற்றம் கடந்து வந்த சட்டப் பாதை
ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்குப் பல்வேறு சட்ட நடைமுறைகளையும் கட்டங்களையும் கடக்க வேண்டும். அதன் விவரம்:
24 ஜூன் 2024: கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதிலிருந்து ‘கேரளம்’ என மாற்றக் கோரிச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
மத்திய அரசின் பரிசீலனை: தீர்மானத்தைப் பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம், ரயில்வே, உளவுத்துறை, அஞ்சல் துறை, இந்திய நில அளவைத் துறை, பதிவாளர் துறை மற்றும் சட்ட அமைச்சகம் ஆகியவற்றிடம் இருந்து ஆட்சேபனையற்ற சான்றிதழ்களை (NOC) பெற்றது.
24 பிப்ரவரி 2026: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கேரள அரசின் கோரிக்கையை ஏற்று ‘கேரளம்’ எனப் பெயர் மாற்ற ஒப்புதல் அளித்தது.
நாடாளுமன்ற ஒப்புதல்: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 3-ன் கீழ் (புதிய மாநில உருவாக்கம், பெயர் மாற்றம், எல்லை மாற்றம்) மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், ‘கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026’-ஐ அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த கட்டம்: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவரின் ஒப்புதல் கிடைத்தவுடன், முறைப்படி அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வ நடைமுறைக்கு வரும்.