

ஜெய்ப்பூர்: கேரளாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி கஸியாலிஸ் மெஜோ ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்று, மகுடம் சூடினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் 2-ம் இடம் பிடித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ அழகி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 52 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், கேரளாவைச் சேர்ந்த 19 வயதான சட்டக் கல்லூரி மாணவி கஸியா லிஸ் மெஜோ மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்று, மகுடம் சூடினார்.
மேலும், இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் 2-ம் இடம் பிடித்தார். குஜராத்தைச் சேர்ந்த அனு சதாவ்லேகர் 3-ம் இடம் பிடித்தார். இருவரும் மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026 பட்டத்தை வென்றனர். மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ள கஸியா லிஸ் மெஜோ, வரும் நவம்பர் மாதம் போர்டோ ரிகோ நாட்டில் நடைபெறும் 75-வது ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஸியா லிஸ் மெஜோ, அழகி போட்டியில் வெற்றிப் பெறுவது இது முதல்முறை அல்ல. 2024-ம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா போட்டியில் பட்டம் வென்ற இவர், 2025-ம் ஆண்டு மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, 2-ம் இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் கேரளா அழகி போட்டியிலும் பட்டம் வென்றார்.
பன்முக திறமை கொண்டவர்
2007-ம் ஆண்டு பிறந்த கஸியா லிஸ் மெஜோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தனது சிறுவயதை கழித்தார். அவர் எமிரேட்ஸ் நேஷனல் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் அபுதாபி இந்தியன் பள்ளியில் கல்வி பயின்றார். தற்போது அவர் சட்டப் படிப்பைத் தொடருவதோடு, மாடலாகவும் பணியாற்றி வருகிறார். 12 ஆண்டுகளாக பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றுள்ள அவர் பாடுவதிலும் திறமை பெற்றவர். அதோடு டிரம்ஸ் மற்றும் வயலின் இசைக்கருவிகளையும் வாசிக்கக்கூடியவர்.
பொதுப் பேச்சு மற்றும் நடிப்புத் துறைகளிலும் அவர் தனது திறமைகளை வளர்த்துள்ளார். கஸியா லிஸ் மெஜோ, மலையாளத் திரைப்படமான ‘ஷைலாக்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.