“கேரளா இனி வெளிநாட்டுப் பணம், லாட்டரி, மதுவை மட்டுமே சார்ந்திருக்க முடியாது” - சசி தரூர்

சசி தரூர் | கோப்புப் படம்

சசி தரூர் | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: ‘‘கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், வெளிநாட்டில் இருந்து வரும் பணம், லாட்டரி, மது ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையில் மாநிலத்தை வைத்திருக்கிறது. இந்த அணுகுமுறை இனியும் எடுபடாது’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், ‘‘கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், வெளிநாட்டில் இருந்து வரும் பணம், லாட்டரி, மது ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையில் மாநிலத்தை வைத்திருக்கிறது. இந்த அணுகுமுறை இனியும் எடுபடாது. இடது ஜனநாயக முன்னணி, மோசமான நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது. சம்பளம் வழங்குவதற்கான நிதி செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவே தீர்ந்துவிடுகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அது கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. எனினும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு தற்போது உள்ள மக்கள் ஆதரவு என்பது மிகவும் நேர்மறையானதாக உள்ளது. இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலைதான் அது என்பதாக சுருக்கிவிட முடியாது.

கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், ஐக்கிய ஜனநாயக முன்னணி 85 முதல் 100 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று எங்கள் சகாக்கள் கூறுகின்றனர். அதிக தொகுதிகளைக் கைப்பற்றுவதில்தான் கட்சி முனைப்பு காட்டும். அதேநேரத்தில், குறைந்தபட்சம் 72 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அது நல்ல வெற்றி என்பதே எனது பார்வை.

ஈரான் போரால் வளைகுடா பிராந்தியத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து கச்சா எண்ணெய்யை பெறுவதில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறது. அரசின் நிலைப்பாட்டை நான் புரிந்து கொள்கிறேன். அரசு கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடு என்பது நமது பலத்தைக் காட்டுகிறதே அன்றி, பலவீனத்தை அல்ல.

வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால், ஒருவேளை நான் காங்கிரஸ் அரசுக்கு ஆலோசகராக இருந்திருந்தாலும், கட்டுப்பாட்டுடன் செயல்படுமாறுதான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி இருப்பேன். கட்டுப்பாடு என்பது சரணடைதல் அல்ல; அது ஒரு பலம். நமது நலன்கள் எவை என்பதை நாம் அறிவோம் என்பதையும், அந்த நலன்களைப் பாதுகாப்பதற்கே நாம் முன்னுரிமை அளிப்போம் என்பதையும் வெளிப்படுத்தும் ஒரு வழியே இந்த கட்டுப்பாடு.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி வழங்கியதாகக் கூறுவது சரியல்ல. எந்த ஒரு இறையாண்மை கொண்ட நாட்டுக்கும் இத்தகைய அனுமதி தேவையில்லை. ஆனால், நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு அஞ்சுகின்றன. நிறுவனங்கள் அஞ்சும் நிலையில், அவற்றுக்கு துணையாக அரசாங்கம் ஏன் நிற்கக் கூடாது?’’ என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>சசி தரூர் | கோப்புப் படம்</p></div>
பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in