புதுடெல்லி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான போர் 21-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானின் முக்கிய எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்கியதால், கத்தாரின் மிகப் பெரிய எண்ணெய் வயலை ஈரான் தாக்கியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. தற்போதும் ஏற்ற இறக்கங்களுடன் கச்சா எண்ணெய் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், விலை உயர்வுக்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை. எனினும், சாதாரண பெட்ரோலின் விலையில் மாற்றம் எதையும் அது செய்யவில்லை.
இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், அவற்றின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பிரீமியம் பெட்ரோல் என்றால் என்ன?
வாகனத்தின் என்ஜினின் செயல் திறன் சிறப்பாக இருப்பதற்காகவும், மேம்பட்ட மைலேஜுக்காகவும் பயன்படுத்தப்படுவது பிரீமியம் பெட்ரோல் எனப்படுகிறது.
குறிப்பாக, சொகுசு வாகனங்கள், ஸ்போர்ட்ஸ் வாகனங்கள், உயர் செயல்திறன் கொண்ட கார்கள் ஆகியவற்றில் இத்தகைய எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆக்டேன் எரிபொருள் அல்லது பவர் பெட்ரோல் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் இந்த விலை உயர்வு, வசதி படைத்த வாடிக்கையாளர்களையே பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை. கூடுதல் சரக்குகள் ஏற்கெனவே வந்து கொண்டிருக்கின்றன. வரும் நாட்களில் இந்தியாவின் விநியோக நிலை மேலும் வலுப்படும். வதந்திகளை நம்பாதீர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை நம்புங்கள்’’ என தெரிவித்திருந்தது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழிவகுக்கும் முயற்சிகளில் முன்னணி ஐரோப்பிய நாடுகளும் ஐப்பானும் இணைய முன்வந்ததால், பேரலுக்கு 110 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை 105 டாலராக குறைந்தது கவனிக்கத்தக்கது.