ஹைதராபாத்: தெலங்கானாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ‘‘நாங்கள் மாநிலத்தில் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறோம். ஜனநாயக ரீதியாக களத்தில் பணியாற்ற விரும்பும் மக்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும்.
எங்களின் கட்சி என்றும் தெலங்கானா மக்களின் கட்சி என்றும் நாங்கள் நினைத்த பிஆர்எஸ், பல விஷயங்களில் எங்களை கைவிட்டுவிட்டது. எங்கள் லட்சியங்களை அது நிறைவேற்றவில்லை. புதிய கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்’’ என தெரிவித்தார்.
முன்னதாக, தெலங்கானா சட்ட மேலவையில் உரையாற்றிய கவிதா, அரசியலில் இணைந்ததற்கான காரணம், பிஆர்எஸ் (தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) கட்சியில் தான் இணைந்ததற்கான காரணங்கள், தனது தந்தையும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் தலைமை, தனது குடும்ப உறுப்பினர்கள் தனக்கு அவமரியாதை இழைத்தது, தான் சந்தித்த பிரச்சினைகள் குறித்தெல்லாம் மிகவும் உணர்ச்சிபட பேசினார்.
தான் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்தும், சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்தும் அவர் விளக்கினார். ஆனால், இதை ஒரு சொத்து பிரச்சினையாக காங்கிரஸ் சித்தரிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டிய கவிதா, இது சுயமரியாதைக்கான போராட்டம் என விவரித்தார்.
தெலங்கானா மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய நபராக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்த கவிதா, ‘‘நான் இந்த அவையை விட்டுச் செல்கிறேன். ஆனால், ஒரு சக்தியாக திரும்புவேன். தெலங்கானாவில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவேன்’’ என தெரிவித்தார்.
தெலங்கானா ஜாக்ருதி என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் கவிதா, அந்த அமைப்பையே அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.