

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் நிஜாமாபாத் மேலவை உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் இவர் தன்னுடைய தநதையின் பிஆர்எஸ் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற மேலவை கூட்டத்தில் கவிதா கண்ணீர் மல்க பேசியதாவது: 2014-ம் ஆண்டில் தனி மாநிலமாக தெலங்கானா உதயமானதும் என்னை ‘டார்கெட்’ செய்து ஒரு கூட்டம் செயல்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு கால கட்டத்திலும் என் கட்சிக்குள்ளேயே நான் அவமானப்படுத்தப்பட்டேன். எத்தனை நாட்கள்தான் நான் அவமானங்களை சமாளிப்பது? தனிப்பட்ட முறையில் நான் படும் அவமானம், கவலைகளை எப்படி வெளியே கூற முடியும்? வேறுவழியின்றி இப்போது வெளிப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பிஆர்எஸ் கட்சியில் எனக்கு எந்தப் பதவி, அல்லது பணி கொடுத்தாலும் செய்தேன். தவறுகள் குறித்து கேட்டால் என்னை குறிவைத்து பேச தொடங்கினர். அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளின்போது கட்சி தரப்பில் எவ்வித ஆதரவோ அல்லது உதவியோ செய்ய முன் வரவில்லை.
இதன் காரணமாக விரைவில் தெலங்கானா மாநிலத்தில் புதிய கட்சி உருவாகும். குடும்ப சொத்துக்காக நான் போராடவில்லை. இது ஆத்ம கவுரவ போராட்டம். என் அரசியல் அனுபவத்தை கொண்டு பிறந்த வீட்டை விட்டு வெளியேறி மக்கள் முன்பு வருகிறேன். மக்களுக்காக வருகிறேன்.
என்னுடைய ‘தெலங்கானா ஜாக்ருதி’ அறக்கட்டளை இனி அரசியல் கட்சியாக மாறும். அடுத்த தேர்தலில் போட்டியிடும். ஒரே ஒருத்தியாக இந்த சபையில் இருந்து வெளியேறி மாபெரும் சக்தியாக திரும்ப வருவேன். இவ்வாறு கவிதா பேசினார். பின்னர் மேலவையில் இருந்து அவர் வெளியேறினார்.