“தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை” - கர்நாடகா நீர்வளத் துறை அமைச்சர்

“தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை” - கர்நாடகா நீர்வளத் துறை அமைச்சர்
Updated on
2 min read

பெங்களூரு: கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யாததாலும், அணைகளில் போதிய அளவு நீர் இல்லாததாலும் தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியார்களிடம் பேசிய ராமலிங்க ரெட்டி, “தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை. குறைவான மழை காரணமாக எங்கள் அணைகளில் போதுமான நீர் இல்லை. எனவே, இப்போதைக்கு தமிழகத்துக்கு தண்ணீரை திறக்கும் சூழலில் நாங்கள் இல்லை. காவிரி நீர் விடுவிப்பு என்பது முழுக்க முழுக்க மழையைப் பொறுத்தே இருக்கும். இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமலிங்க ரெட்டி, “இந்த ஆண்டு மழைப் பொழிவு மிக மிகக் குறைவு. 150 ஆண்டுகளில் இல்லாத குறைவு இது.

இதன் காரணமாக குடிநீருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதனால்தான், நிலைமை சீரடையும் வரை இந்தப் பருவத்தில் விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று விவசாயிகளை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அணைகளில் போதியநீர் இருப்பு இல்லை. இந்த கடினமான காலத்தில் விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களும், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் விவசாயத்துக்கு காவிரி நீரையே நம்பி இருக்கின்றன. இதில், சுமார் 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், போதிய நீர் இருப்பு இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.77.50 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

93.47 டிஎம்சி அளவுக்கு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 38.35 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணை முழுமையாக நிரம்பி இருந்தது. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஷேமாவதி ஆகிய அணைகளில் இருந்தே நீர் திறக்கப்படுகிறது. இந்த அணைகளில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 91.7% ஆக இருந்தது. ஆனால், தற்போது இவற்றின் மொத்த கொள்ளளவில் 35.1% மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இந்த அணைகள் நிரம்புவதற்கு நீர்பிடிப்புப் பகுதிகளில் இரண்டு வார காலத்துக்கு சுமார் 400 முதல் 600 மி.மீ வரை மழை பெய்ய வேண்டியது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி கர்நாடகா ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 32 டிஎம்சி தண்ணீரையும் திறக்க வேண்டும். எனினும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

“தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை” - கர்நாடகா நீர்வளத் துறை அமைச்சர்
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை - சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in