டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை - சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு

தென் மேற்கு பருவமழை தீவிரம்
டெல்லி காஜிபூர் பகுதி

டெல்லி காஜிபூர் பகுதி

Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மழை வெள்ள சம்பவங்களில் 3 பேர் பலி @ டெல்லி

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே இரவில் அதிக மழை பெய்ததை அடுத்து, பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் மின்னல் தாக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் மயூரி விஹாரில் 102 மிமீ மழையும், பூசாவில் 83 மிமீ மழையும், லோதி சாலையில் 80 மிமீ மழையும், சஃப்தர்ஜங் பகுதியில் 72.6 மிமீ மழையும் பாதிவாகியுள்ளது.

ரோஹினியில் புதிதாகக் கட்டப்பட்ட நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர். டெல்லிக்கு அருகில் உள்ள ஹரியானாவின் குருகிராம் நகரிலும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மும்பை ஸ்தம்பித்தது!

மகாராஷ்டிர தலைநகர் மும்பை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிம்ப்ரி - சிஞ்ச்வாட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குப்பை குவியல் சரிந்ததில் 11 பேர் அதில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மும்பையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் புறநகர் ரயில் சேவைகள் தாமதமடைந்தன. இதனால், காலையில் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர். மும்பை - புனே வழித்தடத்திலும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சூரத்தில் வெள்ளப்பெருக்கு:

குஜராத்தின் சூரத் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் சூழப்பட்ட உயரமான கட்டிடங்களில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரின் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வயநாட்டில் தொடரும் மீட்புப் பணிகள்:

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் வி.டி. சதீசன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர், ராஜஸ்தானிலும் பரவலாக மழை:

ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தின் சில பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு அவசரகால மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

ராஜஸ்தானிலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம் கஞ்ச் மண்டி பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் பல மாவட்டங்களில் மேலும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் கனமழை இருக்கும் என்பதால் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>டெல்லி காஜிபூர் பகுதி</p></div>
தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிவு: இன்றைய நிலவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in