

பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், “தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்துவிட வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. அதன்படி, கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கண்டித்து கர்நாடகாவில் உள்ள மண்டியாவில் நேற்று கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து 30க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் போராட்டக்காரர்களை கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் செலுவராயசாமி, “காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். கர்நாடக அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. வறட்சி காரணமாக கடினமான சூழலில் தவிக்கிறோம். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். இதுகுறித்து ஓரிரு தினங்களில் முதல்வர் டி.கே.சிவகுமாருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.