

புதுடெல்லி: நாடு முழுவதும் பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில், ‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை (பேக்கேஜிங்) விதிமுறைகள் 2018’ சட்டத்தின் கீழ், செய்தித்தாள்களில் உணவுகளைப் பொட்டலமாக கட்டி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேநீர் கடைகள், சாலையோரக் கடைகளில் சூடான வடை, போண்டா, பஜ்ஜி, வடா பாவ், சமோசா அல்லது சாட் வகை உணவுகள் அதிகமாக செய்தித்தாள்களில் கட்டி விநியோகிக்கப்படுகின்றன.
ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த விவகாரத்தில் கவனமாக இருக்கும்படி பொதுமக்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) மீண்டும் எச்சரித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவு வணிகம் செய்பவர்களுக்கு எப்எஸ்எஸ்ஏஐ ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, செய்தித்தாள்களில் உணவைப் பொட்டலம் கட்டுவதற்கோ அல்லது பரிமாறுவதற்கோ உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பிரபலமான வடா பாவ் விற்பனையாளர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்குச் செய்தித்தாள்களில் உணவைப் பரிமாறுவதும் பொட்டலங்களாகக் கட்டிக் கொடுப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதுகுறித்து புகார்கள் எழுந்ததால், எப்எஸ்எஸ்ஏஐ நிறுவனத்தின் மேற்கு மண்டலப் பிரிவு, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து அந்தக் கடை மீது நடவடிக்கை எடுத்தனர். இதைதொடர்ந்து, எப்எஸ்எஸ்ஏஐ உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செய்தித்தாளில் உள்ள கருப்பு மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், சாயங்கள் மற்றும் ஈயம் போன்றவை உள்ளன. சூடான உணவை செய்தித்தாள் மீது வைக்கும் போது, இந்த மை உருகி உணவோடு கலக்கிறது.
இது தீவிர உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எப்எஸ்எஸ்ஏஐ எச்சரித்துள்ளது. செய்தித்தாள்களில் உணவை பொட்டலமாகக் கட்டி கொடுப்பது குறித்து அறிந்தால், உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் எப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தியுள்ளது.