ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த க‌ர்நாடக டிஐஜி கைது

ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த க‌ர்நாடக டிஐஜி கைது
Updated on: 
1 min read

பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில் கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சிக்பேட்டையில் வட்டித் தொழில் செய்து வந்தவர் சங்கர் ஆராத்யா (42). கடந்த 2001-ம் ஆண்டு பணத்துக்காக ஆட்களை கடத்தி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சங்கர் ஆராத்யாவின் மனைவி ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெங்களூரு சிறையில் தீர்ப்பு நகல் ஒன்றை சமர்ப்பித்தார். உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கில் கணவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருப்பதாக போலியான தீர்ப்பு நகலை தயாரித்து அளித்தார்.

இதனை ஏற்று் அப்போதைய சிறை கண்காணிப்பாளர் சோமசேகர், சங்கர் ஆராத்யாவை 2018-ல் விடுதலை செய்தார். இந்நிலையில் கடந்த 2022-ல் ரம்யா கர்நாடக மாநில சிறைத்துறை டிஜிபியிடம் அளித்த புகாரில், ''எனது கணவர் சங்கர் ஆராத்யா போலியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை காட்டி விடுதலை ஆகியுள்ளார்.

இதற்கு சிறை கண்காணிப்பாளர் சோமசேகரும் உடந்தை'' என முறையிட்டிருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இப்புகாரை விசாரிக்குமாறு சிறைத்துறை டிஜிபியாக பொறுப்பேற்ற அலோக் குமார், உத்தரவிட்டார்.

விசாரணையில், சோமசேகரும், ஸ்ரீகாந்த்தும் கூட்டு சதி செய்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை போலியாக தயாரித்தது தெரியவந்தது. சங்கரை விடுதலை செய்ய மனைவி ரம்யாவிடம் இருவரும் ரூ.20 லட்சமும் பெற்றுள்ளனர்.

மேலும் சங்கர் ஆராத்யாவுக்கு தெரிந்தே அவரது மனைவி ரம்யாவை சோமசேகரும், ஸ்ரீகாந்த்தும் பாலியல் ரீதியாக உபயோகித்ததும் தெரியவந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த சங்கர் ஆராத்யா மனைவி ரம்யாவை துரத்திவிட்டு, தனது உறவினர்

மகளை 2-வது திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்தே ரம்யா போலீஸில் புகார் அளித்துள்ளார். சிறைத்துறை டிஐஜியாக இருந்த சோமசேகர், தலைமை காவலர் ஸ்ரீகாந்த், சங்கர் ஆராத்யா ஆகிய 3 பேரையும் போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த க‌ர்நாடக டிஐஜி கைது
“என்னை எதிர்த்தவர்களே ஜனநாயகத்தின் சக்தியை கற்றுக் கொடுத்தார்கள்” - ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in