

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்தின் போது, திமுக எம்.பி. கனிமொழி நேற்று பேசியதாவது: மகளிர் இடஒதுக்கீடுக்கு ஆதரவானவை போல வரும் 3 மசோதாக்களும், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் மீது தொடுக்கப்படும் மிகக் கடுமையான தாக்குதல்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அழைப்பை தென் மாநிலங்கள் ஏற்றன. அதனால் எங்கள் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்தது. இப்போது நாம் ஏன் இடங்களை 850 ஆக அதிகரிக்க வேண்டும்?
நீங்கள் தொகுதி மறுவரையறை செய்ய 15 வருடங்கள் பழமையான 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துகிறீர்கள். 850 இடங்கள் விஷயத்தில் நீங்களே உங்களுக்கு முரண்படுகிறீர்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். 1971 முதல் உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை 120% அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15% மட்டுமே அதிகரித்துள்ளது.
மேலும், உள்துறை அமைச்சர் கூறியதற்கு மாறாக, மசோதாவின் 4-வது பிரிவு, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெளிவாகக் கூறுகிறது. உள்துறை அமைச்சர் ஒன்று சொல்கிறார், மசோதாவோ வேறொன்று சொல்கிறது.
2011 சூத்திரத்தின்படி, உ.பி. 13 இடங்களைப் பெறுகிறது. தமிழ்நாடு 11 இடங்களை இழக்கிறது. ஆனால் நேற்று உள்துறை அமைச்சர், 50% அதிகரிப்பதன் மூலம் 39 இடங்களைக் கொண்ட தமிழ்நாடு மாநிலம் 59 இடங்களைப் பெறும் என்கிறார். நீதி என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியானதைக் கொடுப்பது அல்ல, நீதி என்பது ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தேவையானதையும், அவர்கள் தகுதியானதையும் கொடுப்பதுதான்.
எனவே இந்த மூன்று மசோதாக்களையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். 25 ஆண்டு கால தேர்தல் வரைபடத்தை 48 மணி நேரத்தில் ஒரு சிறப்பு அமர்வின் மூலம் அவசரமாக நிறைவேற்ற வேண்டாம். தொகுதி மறுவரையறைக்கான கட்டமைப்பு குறித்து விவாதிக்க அனைத்து மாநில முதல்வர்களையும் கொண்ட ஒரு அரசியலமைப்பு மாநாட்டைக் கூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.