“நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்”: கல்பாக்கம் அணு உலை குறித்து பிரதமர் மோடி பாராட்டு

“நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்”: கல்பாக்கம் அணு உலை குறித்து பிரதமர் மோடி பாராட்டு
Updated on
3 min read

புது டெல்லி: கல்பாக்கத்தில் அமைந்துள்ள விரைவு ஈனுலை, நிலைமாறு நிலையை அடைந்தது இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையின் விவரம்: தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள 'விரைவு ஈனுலை' (Fast Breeder Reactor) 'நிலைமாறு நிலையை' (Criticality) அடைந்துள்ளது. 'நிலைமாறு நிலை' என்பது ஒரு அணு உலை முதன்முறையாகத் தனக்குத்தானே இயங்கக்கூடிய அணுக்கருத் தொடர்வினையை வெற்றிகரமாக அடையும் கட்டமாகும். இந்தக் கட்டம், அந்த அணு உலை முழுமையாகச் செயல்பாட்டு நிலைக்குள் நுழைவதைக் குறிக்கிறது.

இந்தியாவின் அணுசக்திப் பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த அணு உலை முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆற்றலை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், இந்த ஈனுலை எதிர்காலத்திற்கான புதிய எரிபொருளையும் உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்புகளை வழங்கிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். இத்திட்டம் தொழில்துறை வளர்ச்சிக்கும், எரிசக்தித் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் பயனளிக்கும்.

இந்தியா காற்றாற்றல் மின்சார உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது. காற்றாற்றல் துறையில் இந்தியா சமீபத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவின் காற்றாற்றல் உற்பத்தித் திறன் தற்போது 56 ஜிகாவாட்களைத் தாண்டியிருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும், ஏறக்குறைய 6 ஜிகாவாட் அளவிற்கான புதிய உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. காற்றாற்றல் துறையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. காற்றாற்றல் உற்பத்தித் திறனில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்கள் இத்துறையில் முன்னோடிகளாகத் திகழ்கின்றன. குஜராத் மாநிலத்தின் கட்ச், பாடன் மற்றும் பனஸ்கந்தா போன்ற பகுதிகளில் பிரம்மாண்டமான புதுப்பிக்கத்தக்க காற்றாற்றல் பூங்காக்கள் உருவாகி வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்குச் சூரிய ஆற்றலும், காற்றாற்றலும் இன்றியமையாதவை.

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் நடக்கிறது. 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தகவல்களும் நேரடியாக டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்படுகின்றன. வீடு வீடாகச் செல்லும் கணக்கெடுப்பாளர்கள், அனைத்துத் தகவல்களையும் உள்ளிடுவதற்கு ஒரு மொபைல் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எளிதாக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் குடும்பங்களுக்கான கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அரசாங்கத்தின் பணி மட்டுமல்ல, அது அனைவரின் பொறுப்பு. இதில் மக்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது. மக்களால் வழங்கப்படும் தகவல்கள் முற்றிலும் பாதுகாப்பானவை, ரகசியமானவை.

'ரன் ஆஃப் கட்ச்' (Rann of Kutch) பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை முடிவடைந்த உடனேயே லட்சக்கணக்கான 'ஃபிளமிங்கோ' பறவைகள் வந்து குவிகின்றன. அந்தப் பகுதி முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடுவதால், அதற்கு 'ஃபிளமிங்கோ நகரம்' (Flamingo City) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்ச் பகுதி மக்கள் அந்தப் பறவைகளை 'லக்கா ஜி கே பாராதி' என்று அழைக்கின்றனர். தற்போது, ​​கட்ச் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அழகான அடையாளமாக இந்த 'லக்கா ஜி கே பாராதி' பறவைகள் மாறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மூங்கில் துறையில் வடகிழக்கு மாநிலங்கள் வெற்றி அடைந்துள்ளன. ஒரு காலத்தில் சுமையாகக் கருதப்பட்ட மூங்கில்கள், இப்போது வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் புத்தாக்கத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கின்றன. பிரிட்டிஷ் சட்டத்தின்படி, மூங்கில் ஒரு மரமாக வரையறுக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடைய விதிகள் மிகவும் கடுமையாக இருந்தன. மூங்கிலை எங்கும் கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. அதன் விளைவாக மக்கள் மூங்கில் தொடர்பான தொழில்களில் இருந்து விலகத் தொடங்கினர். எனது அரசாங்கம் 2017-ல் சட்டத்தை மாற்றி, மூங்கிலை மர வகையிலிருந்து நீக்கியது.

இன்று வடகிழக்கு முழுவதும் மூங்கில் தொழில் துறை செழித்து வளர்ந்து வருகிறது. திரிபுராவின் கோமதி மாவட்டத்தைச் சேர்ந்த பிஜோய் சூத்ரதர் மற்றும் தெற்கு திரிபுராவைச் சேர்ந்த பிரதீப் சக்ரவர்த்தி ஆகியோர் புதிய மூங்கில் சட்டங்களை தங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதி, தங்கள் பணியை தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்துள்ளனர். இன்று, அவர்கள் முன்பை விட சிறந்த மற்றும் அதிக மூங்கில் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.

நாகாலாந்தின் திமாபூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூங்கில் சார்ந்த உணவுப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டல் செய்துள்ள பல சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. மூங்கில் மரச்சாமான்கள் மற்றும் கைவினைப் பொருட்களில் பணியாற்றி வரும் 'கோரோலோ கிரியேட்டிவ் கிராஃப்ட்ஸ்' போன்ற குழுக்களும் உள்ளன. சிக்கிமில் உள்ள காங்டாக் அருகே, மூங்கிலிலிருந்து கைவினைப் பொருட்கள், ஊதுபத்திகள், மரச்சாமான்கள் மற்றும் உள் அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கும் 'லகாஸ்டல் மூங்கில் எண்டர்பிரைஸ் டீம்' சிறப்பாக செயல்படுகிறது.

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் 20 கோடிக்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிப் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்துள்ளது. இந்த ஆவணங்களில், போஜ பாத்ரா குறித்து எழுதப்பட்ட 7ஆம் நூற்றாண்டு கில்கிட் கையெழுத்துப் பிரதிகளும், 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவாரஸ்யமான நூலான சிறிபூவாலயமும் அடங்கும்.

இந்த ஆவணங்களில், ராணி லட்சுமிபாய் தொடர்பான சில முக்கியக் கடிதங்களும் அடங்கும்; அவை 1857-ல் அவர் எடுத்த சில முடிவுகளை வெளிப்படுத்துகின்றன. நேதாஜியின் வாழ்க்கை, ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் மற்றும் அவரது உரைகள் தொடர்பான பல ஆவணங்கள் உள்ளன.

குழந்தைகள் தங்கள் கோடை விடுமுறையை முழுமையாகக் கொண்டாட வேண்டும். புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். கோடைக்காலத்தில் அனைவரும் தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

“நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்”: கல்பாக்கம் அணு உலை குறித்து பிரதமர் மோடி பாராட்டு
“அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது” - ஈரான் அதிபர் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in