

புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நிலையில் பண மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய நீதிபதி யஷ்வந்த் மறுத்துவிட்டார்.
இதையடுத்து மக்களவையில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு 3 உறுப்பினர் கொண்ட விசாரணை குழுவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்தார். இதே தீர்மானம் மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா மனுத் தாக்கல் செய்தார். அதில் விசாரணைக்கு குழு அமைத்தது அரசியல் சாசனம் மற்றும் நீதிபதிகள் விசாரணை சட்டத்துக்கு எதிரானது என கூறி சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்யும்படி நீதிபதி வர்மா கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் எஸ்சி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லுத்ரா ஆஜராயினர். மத்திய அரசின் சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.