கேரளாவில் பெண்களுக்கு ஜூன் 15 முதல் இலவச பயணம்

கேரளாவில் பெண்களுக்கு ஜூன் 15 முதல் இலவச பயணம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 15-ம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில முதல்வர் சதீஷன் அறிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற வாக்குறுதியை ஐக்கிய ஜனநாய முன்னணி கட்சி அளித்தது. இந்த வாக்குறுதியை கேரள முதல்வர் சதீஷன் நிறைவேற்றியுள்ளார். வரும் 15ம் தேதி முதல் கேரள அரசு போக்குவரத்தின் சாதாரணப் பேருந்துகளில் அனைத்து வயது பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என அவர் நேற்று அறிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) அரசு ஏற்கெனவே ஆண்டுக்கு ரூ.1,500 கோடி நிதி அளிக்கிறது. தற்போது பெண்களுக்கு இலவசப் பயணம் திட்டம் அமல்படுத்தப்படுவதால் மாதத்துக்கு ரூ.70 கோடி செலவாகும். இதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.800 கோடி மானியம் வழங்கப்படும்.

இதனால் இத்திட்டம் அமலான 6 மாதங்களில், கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரிக்கும். முதல் கட்டமாக இலவச பயணம் சாதாரண பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும். இவற்றில் பெண்கள் வயது வித்தியாசமின்றி அனைவரும் இலவசமாக பயணிக்கலாம். கள அளவிலான மதிப்பீட்டு அடிப்படையில், இத்திட்டம் பின்னர் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, சீரமைக்கப்படும். இவ்வாறு சதீஷன் கூறினார்.

கேரளாவில் பெண்களுக்கு ஜூன் 15 முதல் இலவச பயணம்
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்களின் ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in