

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் அனைத்து இந்திய நீதிபதிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியதாவது:
நீதிபதிகள் பணிபுரியும் நேரம் அதிகமாக உள்ளது. அத்துடன் அவர்களுடைய பணியின் தன்மை மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது. நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்தில் பணிபுரிய வேண்டி உள்ளது. எனவே, அனைத்து நீதிபதிகளும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தைப் போக்கி தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள பொழுதுபோக்கு அவசியம். இந்த நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கின்றனர். இது அவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றி விழிப்புடன் இருப்பதைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.