

முஷாபர்நகர்: உத்தர பிரதேச விரைவு நீதிமன்ற நீதிபதி ஒருவர் நான்கே மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் முஷாபர்நகர் விரைவு நீதிமன்றத்தின் நீதிபதியாக ரவிகுமார் திவாகர் (46) பணியாற்றி வருகிறார். வாராணசி கியான்வாபி மசூதி தொடர்பான வழக்கு கடந்த 2022-ம் ஆண்டு இந்த நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கியான்வாபி மசூதியை ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார்.
இதுபோன்று பல்வேறு துணிச்சலான உத்தரவுகள், தீர்ப்புகளை அவர் பிறப்பித்து வருகிறார். ஊர்க்காவல் படை வீரர் கொலை வழக்கில் கடந்த ஜூலை 2-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவிகுமார், தீபக் என்பவருக்கு மரண தண்டனை விதித்தார்.
வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் கடந்த ஜூலை 17-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவிகுமார், குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்தார்.
12 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த 13-ம் தேதி தீர்ப்பு வழங்கிய அவர், 4 பேருக்கு மரண தண்டனை விதித்தார். ஒட்டுமொத்தமாக கடந்த 4 மாதங்களில் 22 பேருக்கு நீதிபதி ரவிகுமார் திவாகர் மரண தண்டனை விதித்துள்ளார்.