“நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் முயற்சி” - ஜார்க்கண்ட் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி

Updated on: 
1 min read

ராஞ்சி: தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “கடந்த 2014-ல் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. அப்போது முதல் பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி, ஆளும் தரப்பு மீது வைத்து வருகிறது. மத்திய அரசு மற்றும் தேர்தல் நடைமுறை குறித்து பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பி உள்ளனர். அறவே உண்மையற்ற அந்த கூற்றை மக்கள் நம்புவது இல்லை.

இதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ரஃபேல் ஒப்பந்தம், போன் ஒட்டுக்கேட்பு, வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு வரிசையில் இப்போது தேர்தல் ஆணையர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து வருகிறது. இது மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு. மக்கள் இப்போது விழிப்படைந்து உள்ளனர். ராகுல் குறித்த புரிதலை நன்கு பெற்றுள்ளனர். ராகுல் மற்றும் காங்கிரஸ் பேச்சை தேசம் பொருட்படுத்துவதில்லை.

ராகுல் காந்தியின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சி கவலை கொண்டுள்ளது. அவருக்கு நல்ல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் 2029 பொது தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியை அவர் மூழ்கச் செய்வார். ராகுல் காந்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என அனைவரும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை ஒருமனதாக எடுப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை ஏமாற்றம் கொள்ளச் செய்தது. தேசத்தின் புகழை வெளிநாடுகளில் ராகுல் மங்கச் செய்து வருகிறார்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் பாபுலால் மராண்டி, இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்று ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜேஷ் தாக்குர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி மற்றும் அவரது ஜேவிஎம் (ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா) கட்சி கூட்டணியில் இருந்த போது ராகுலிடம் மண்டியிட்டவர் பாபுலால் மராண்டி. இப்போது இப்படிப் பேசுகிறார்.

அரசியலில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள இப்படி செயல்படுகிறார் என்று ராஜேஷ் தாக்குர் தெரிவித்தார். கடந்த 2020-ல் ஜேவிஎம் கட்சி பாஜக-வில் ஐக்கியமானது.

<div class="paragraphs"><p>ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி</p></div>
“பாஜக-வினர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவதன் பின்னணி என்ன?” - ரேவந்த் ரெட்டி விளக்கத்தால் சர்ச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in