

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் 6,600 மணி நேரம் பறந்த 39 ஆண்டு கால பழைய விமானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி 23ம் தேதி இரவு 7.11 மணி அளவில் நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.
இந்த விமானம் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமாரியா காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்தனர். இந்த ஏர் ஆம்புலன்ஸை விவேக் விகாஷ் பகத் என்ற விமானி இயக்கினார். துணை விமானியாக இருந்தவர் சவ்ராஜ் தீப் சிங்.
ரெட்பேர்ட் ஏர்வேஸ் இயக்கிய இந்த பீச்கிராப்ட் சி 90 ஏ விமானம் 1987-ல் தயாரிக்கப்பட்டது. இது 6,610 மணி நேரம் பறந்திருந்தாலும், புள்ளி விவரப்படி இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட விமானம் அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்துக்கான தகுதிச் சான்றிதழ் இந்த ஆண்டு ஜனவரி 21-ல் புதுப்பிக்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கருப்பு பெட்டி இல்லை: விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸில் கருப்பு பெட்டி இருக்கவில்லை. ஏனெனில் சிவில் விமான போக்குவரத்து விதிகளின்படி, 5,700 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட விமானங்கள் ‘காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' (CVR) அல்லது ‘ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர்' (FDR) எனப்படும் கருப்பு பெட்டியை வைத்திருப்பது கட்டாயமல்ல.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தின் அதிகபட்ச எடை 4,583 கிலோ மட்டுமே என்பதால், அதில் இந்த கருவிகள் பொருத்தப்படவில்லை.
பிளாக் பாக்ஸ் இல்லாத நிலையில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான உரையாடல்கள், விமானத்தின் சிதைந்த பாகங்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை வைத்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்வார்கள்.
விமானத்தில் இருந்த வானிலை ரேடாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் பாதையை மாற்றியதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.