

ஜேடியு எம்எல்ஏ ஆனந்த் சிங்
புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மீது அவரது சொந்தக் கட்சி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாருக்காக 9 கொலைகளை தான் செய்ய வைத்திருப்பதாக ஜேடியு எம்எல்ஏவான ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் நடைபெறவுள்ள எம்எல்சி மேல் சபை தேர்தல் குறித்த மோதல் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் மீது புகார் கிளம்பியுள்ளன.
இது குறித்து மொகாமா தொகுதி எம்எல்ஏவும், ஜேடியு கட்சியை சேர்ந்தவருமான ஆனந்த் சிங் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஆனந்த் சிங் தனது பேட்டியில், ’பிஹாரில் நிதிஷ் குமாரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை. நான் கட்சிக்காகப் பல தியாகங்களைச் செய்தேன்.
அந்தக் காலகட்டத்தில் அவருக்காக 9 கொலைகளைச் செய்ய வைத்தேன். அதற்கான திட்டங்களை நான்தான் வகுத்தேன். எனினும், நான் நிதிஷ் குமார் மீது இன்னும் விசுவாசமாகவே உள்ளேன். நான் அவரது ஆதரவாளன், அவரை எதிர்த்து நான் சவால் விடுக்கவில்லை.
நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே நான் அவருடன் உறுதுணையாக இருந்தேன். கட்சிக்காக என்னைப் போலப் பல தியாகங்களைச் செய்தவர்கள் மிகச் சிலரே.
எம்எல்சி தேர்தலுக்கான வேட்பாளராக தேர்வாகி உள்ள நீரஜ்குமார், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர். கருத்து வேறுபாடுகள் உள்ளவரை கட்சியின் வேட்பாளராக்கியது ஜேடியு செய்த தவறு” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹாரின் குற்றப் பதிவு அரசியல்வாதிகள் பட்டியலில் ஆனந்த் சிங் இடம்பெற்றிருந்தார். இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகி, சிறையிலும் இருந்துள்ளார்.
சிறையில் இருக்கும்போதும் தொகுதியில் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடாமல் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், தனது வீட்டில் புலி, பாம்புகள் வளர்த்தும் சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.