“பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

“பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

பாட்னா: ”சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கிக்கொள்வோமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலகுவதற்காக அவருக்கு எதிராகச் சதி செய்தனர்” என பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.

பாட்னாவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய தேஜஸ்வி யாதவ், “நிதிஷ்குமார் பதவி விலகுவது தொடர்பான முடிவு, சட்டப்பேரவைத் தேர்தலின் போதே எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை.

2025 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​முதல்வர் நிதிஷ் குமார் நீண்ட காலத்திற்குப் பதவியில் நீடிக்க மாட்டார் என்று நான் கணித்தது தற்போது உண்மையாகிவிட்டது. தேர்தல் சமயத்தில், அரசியல் ரீதியான பின்விளைவுகளுக்கு அஞ்சி, அவர்களால் நிதிஷை ஓரங்கட்ட முடியவில்லை. ஆனால் இது தொடர்பாக அவர்களுக்குள் அப்போதே ஒரு ரகசியத் திட்டம் இருந்தது. இப்போது அதுவே நடந்துவிட்டது.

மத்திய விசாரணை முகமைகளின் மீதான அச்சத்தினாலோ அல்லது ஏதேனும் சலுகைகளுக்கு ஆசைப்பட்டோ, ஜேடியுவின் மூத்த தலைவர்கள் பாஜகவுடன் சேர்ந்து இந்த சதியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் நிதிஷ் குமாரை இப்போது ஒரு பொறியினுள் சிக்க வைத்துவிட்டனர். அவரோ விருப்பமில்லாமலேயே மாநிலங்களவைக்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

அராரியாவில் ஒரு நபர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது, ஜெகானாபாத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, மாநிலத்தில் கொடூரமான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஆனால் என்டிஏ கூட்டணிக் கட்சிகளும் அதன் தலைவர்களும், புதிய முதல்வர் முகத்தைத் தேடும் இசை நாற்காலி விளையாட்டிலேயே மும்முரமாக உள்ளனர். ஆட்சி நிர்வாகம் என்பது அவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக அமைச்சரவைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை" என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.

“பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
“தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in