

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு தடைவிதித்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. அது 140 கோடி இந்தியர்களுக்கும் சொந்தமான இடம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசியக் கொடியை ஏற்றியதற்காக சிஜேபி தொண்டர்கள் பலர் டெல்லி காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. ஜந்தர் மந்தரில் தேசியக் கொடி ஏற்றுவதை சட்ட மீறல் என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகள்.
எங்கள் குழுவினர் இன்று காலை ஜந்தர் மந்தருக்குச் சென்று மூவர்ணக் கொடியை ஏற்றினர். தேசியக் கொடியை ஏற்றுவது எப்போது சட்டவிரோதமான குற்றமானது? ஜந்தர் மந்தர் என்பது வெறும் இடம் மட்டுமல்ல, அது ஒரு எதிர்ப்பின் ஆன்மா என்பதை ஆட்சியாளர்கள் புரி்ந்து கொள்ள வேண்டும்.
ஜந்தர் மந்தருக்கு யாரும் சென்று மூவர்ணக் கொடியை ஏற்றக்கூடாது என்று இந்த சர்வாதிகார அரசு விரும்புகிறது. ஒட்டுமொத்த நாடும் தங்களின் சொந்தச் சொத்து என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜந்தர் மந்தர் என்பது இந்த நாட்டின் 140 கோடி மக்களுக்கும் சொந்த மானது.
எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை தொடர்ந்து கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு திப்கே தெரிவித்தார். டெல்லி காவல்துறை திங்கள்கிழமையன்று ஜந்தர் மந்தரை போராட்டங்கள் நடத்தும் அதிகாரப்பூர்வ இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கியது. அதற்கு மாற்றாக, போராட்டங்கள் நடத்த ராம் லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சி.பி.டி. மைதானம் ஆகிய மூன்று மாற்று இடங்களை அறிவித்தது.
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று காலை ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் மற்றும் அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்ட சிஜேபி கட்சி நிர்வாகிகளை டெல்லி காவல்துறை கைது செய்ததை அடுத்து திப்கே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.