

மதுரை: கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கு 1,000 அட்டைதாரர்களுக்கு 50 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு கார்டுக்கு 50 கிராம் அளவே இருப்பதால், சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறுகின்றனர்.
வெங்காயம் உற்பத்தி குறைந்ததால் சந்தைகளுக்கு வரத்தும் குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 110-ல் ருந்து ரூ.120 வரை விற்கப்படுகிறது. இதனால் பெரிய வெங்காயத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதன் தேவையும் அதிகரித்துள்ளது.
இதனால் வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் வெங்காயம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால குறைந்த அளவு சப்ளை செய்யப்படுவதால், அதை சரியாக விநியோகிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.
இதுகுறித்து குடும்ப அட்டைதாரர்கள் கூறுகையில்,’ வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.65-க்கு விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு விற்கின்றனர். 1,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெறும் 50 கிலோ மட்டும் வழங்குகின்றனர். ஒரு கார்டுக்கு 50 கிராம் என்ற அளவில்தான் உள்ளது. கார்டுக்கு ஒரு கிலோ வழங்கும்போது, மீதமுள்ள 950 பேருக்கு கிடைக்கவில்லை. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும் வகையில் தரமான வெங்காயம் வழங்க வேண்டும்’ என்று கூறினார்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறையினர் கூறுகையில், ‘மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் கிராமங்கள், நகர் பகுதிகளில் 1,409 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் நகர் பகுதியிலுள்ள 481 கடைகளுக்கு மட்டும் மாதத்துக்கு 30 டன் வெங்காயம் வழங்கி உள்ளோம். கடந்த செப்டம்பரில் மாவட்டம் முழுவதும் 120 டன் வெங்காயம் வழங்கினோம். அரசு எவ்வளவு தருகிறதோ, அதனை கடைகள் வாரியாக பிரித்து அனுப்புகிறோம்.
தேவை அதிகரித்துள்ளதால் விஜயதசமி முடிந்தபின்பு, கிராமப்புறங்களிலுள்ள கடைகளுக்கு வழங்க உள்ளோம். குறைந்த அளவிலேயே வழங்கப்படுவதால், ஊழியர்கள் மிகுந்த சிமரத்திற்குள்ளாகின்றனர்’ என்று கூறினர்.