

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது செனாப் ரயில் பாலம். உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான இது நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் வழியாக, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து கத்ரா–ஸ்ரீநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், செனாப் ஆற்றுப் பாலத்தையும், இந்தியாவின் முதல் கேபிள் ரயில்வே பாலமான அஞ்சி பாலத்தையும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கடந்து சாதனை படைத்தது.
இதுகுறித்து, வடக்கு கோட்ட ரயில்வே மூத்த வணிக மேலாளர் உச்சித் சிங்கால் கூறியதாவது: வடக்கு ரயில்வேயின் ஜம்மு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா–பனிஹால் ரயில் பிரிவில் வேகத்தை அதிகரிப்பதற்கான சோதனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தையும், இந்தியாவின் முதல் கேபிள் பாலமான அஞ்சி பாலத்தையும் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கடந்து புதிய சாதனை படைத்தது. இதன்மூலம், ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா முதல் பனிஹால் வரையிலான பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.