

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பபிதா தாகர் (எ) கதீஜா (38) என்ற பெண்ணை ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை (ஏடிஎஸ்) போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து ஏடிஎஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஜெய்ப்பூரில் பெற்றோருடன் வசித்த பபிதாவுக்கு, பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரது மின்னணு சாதனங்களில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் பல பாகிஸ்தான் தொலைபேசி எண்கள் கண்டறியப்பட்டன. அவற்றில், ஜெய்ஷ் தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய உறவினரான யூசுப் அசார் மற்றும் இந்தியாவில் பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்படும் காரி ஜரார் ஆகியோரின் எண்களும் அடங்கும்.
பபிதாவின் பேஸ்புக், மெஸஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பல பாகிஸ்தானியர்கள் மற்றும் ஜெய்ஷ் அமைப்பினருடன் அவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவரும் நெருங்கிய கூட்டாளியுமான கமாண்டர் அபு உபைதாவுடன் நெருக்கமானார். பபிதாவை திருமணம் செய்து கொள்ள அபுஉபைதா விரும்பினார்.
திருமணம் செய்துகொள்ளவும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பில் பணியாற்றவும் பபிதா பாகிஸ்தானுக்கு அழைக்கப்பட்டார். நேபாளம், சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தான் வர அவருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பபிதா பாகிஸ்தான் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். இவ்வாறு ஏடிஎஸ் அதிகாரிகள் கூறினர்.