

லக்னோ: உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் நடைபெறும் காவடி யாத்திரையில் பங்கேற்கும் சிவபக்தர்களை வரவேற்கும் வகையில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவும் நிகழ்ச்சியை மாநில அரசு நடத்துகிறது.
ஸ்ராவண காவடி யாத்திரை என்பது சிவபெருமானின் ஸ்ரீவடிவ வழிபாட்டிற்காக, இந்துக்களால் தமிழ் மாதமான ஆடி (ஷ்ராவண மாதம்) மாதத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு புனித யாத்திரையாகும். வடமாநிலங்களில் பிரபலமான இந்த யாத்திரையில் பக்தர்கள் காவடி போன்ற அமைப்பில் கங்கை நீரைச் சுமந்து சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்வர்.
உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் நடைபெறும் காவடி யாத்திரையில் பங்கேற்கும் சிவபக்தர்களை வரவேற்கும் வகையில், வரும் 9, 10 ஆகிய தேதிகளில் 7 மாவட்டங்களில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவும் நிகழ்ச்சியை, மாநில அரசு நடத்துகிறது. இதுதொடர்பாக, உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில், வரும் 9-ம் தேதி காலை 8 மணியளவில் ஹெலிகாப்டர் லக்னோவிலிருந்து பாக்பத் மாவட்டத்துக்குப் புறப்படுகிறது. அங்கு காலை 10.30 மணி முதல் 11.15 மணி வரை யாத்திரிகர்கள் மீது மலர் தூவப்படும்.
அதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் சஹாரன்பூர் மாவட்டத்துக்குச் சென்று, அங்கு காலை 11.45 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை பக்தர்களுக்கு மலர்களால் வரவேற்பு அளிக்கப்படும். பின்னர், முசாஃபர்நகர் மாவட்டத்தில் மதியம் 1.30 மணி முதல் 2.15 மணி வரையும், மீரட் மாவட்டத்தில் பிற்பகல் 3.45 மணி முதல் 4.30 மணி வரையும் மலர்தூவும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக, முதல் நாளில் ஹெலிகாப்டர் மொத்தம் 6 மணி 10 நிமிடங்கள் பறக்கும்.
அடுத்த நாள் 10-ம் தேதி மீரட்டிலிருந்து புறப்படும் ஹெலிகாப்டர், காலை 8.30 மணி முதல் 9.15 மணி வரை காசியாபாத் மாவட்டத்தில் யாத்திரிகர்கள் மீது மலர் தூவும். பின்னர், ஹாப்பூர் மாவட்டத்தில் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரையும், புலந்த்ஷார் மாவட்டத்தில் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் மலர்களால் பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள். நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், பிற்பகல் 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் புலந்த்ஷாரிலிருந்து புறப்பட்டு லக்னோவுக்கு சென்றடையும்.
2-ம் நாளில் ஹெலிகாப்டர் மொத்தம் 3 மணி 45 நிமிடங்கள் பறக்கும். ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ராவண காவடி யாத்திரை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்வதுடன், பக்தர்களுக்கு ஆன்மிக நிறைவை அளிக்கும் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.