

புது டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 7 ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்களை, பதவியில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த தனது நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க நேரம் கோரியுள்ளார். மேலும், பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து குடியரசுத் தலைவரைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவருடனான இந்தச் சந்திப்பின்போது, ஆம் ஆத்மி எம்.பி.க்களின் கட்சித் தாவல் விவகாரத்தை எழுப்பி, அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான வாதங்களை பகவந்த் மான் முன்வைப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சதா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, சுவாதி மாலிவால் மற்றும் விக்ரம்ஜித் சாஹ்னி ஆகியோர், ஆம் ஆத்மியிலிருந்து விலகி, நேற்று பாஜகவில் இணைந்தனர்.
7 எம்.பிக்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்களை துரோகிகள் என்று விமர்சித்தார். மேலும், பாஜக ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முயற்சிப்பதாகவும், பஞ்சாப் மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவர், "எனக்கு எதிராகக் குறை கூற எதுவும் கிடைக்காத நிலையில், அவர்கள் ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முயல்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதிலிருந்து, பஞ்சாப் மீது வன்மம் காட்டி வருகிறார்” என்று குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவரை சந்திக்க பகவந்த் மான் எடுத்துள்ள நடவடிக்கையை, அரசியல் நாடகம் என்றும், அதற்கு எவ்வித அரசியலமைப்பு அடிப்படையுமில்லை என்றும் சிரோமணி அகாலி தளம் கடுமையாக விமர்சித்துள்ளது.
அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின்படி, கட்சி தாவும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின் வரம்பிற்குள்ளேயே வருகிறதே தவிர, அது குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என்று அகாலி தளத்தின் மூத்த தலைவர் தல்ஜித் சீமா தெரிவித்தார். ஒரு கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் மற்றொரு கட்சியில் இணைந்தால், அக்கட்சிகள் இணைவதற்கு 'கட்சித் தாவல் தடைச் சட்டம்' அனுமதி அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார். பஞ்சாபின் சாமானிய மக்களின் பிரதிநிதிகளுக்குப் பதிலாக, பெரும் செல்வந்தர்களான வெளியாட்களை ராஜ்யசபா எம்.பிக்களாக ஆம் ஆத்மி நியமித்தது என அவர் குற்றம்சாட்டினார்.
7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததன் காரணமாக, ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றஉறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இந்த நிகழ்வு ஆம் ஆத்மிக்கு பெரும் சறுக்கலாக மாறியுள்ளது.