‘எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்க முடியாது’ - இஸ்ரோ திட்டவட்டம்

‘எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்க முடியாது’ - இஸ்ரோ திட்டவட்டம்
Updated on
1 min read

பெங்களூரு: இஸ்ரோ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கத் திட்டம் உருவகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமோ இல்லை என இஸ்ரோ மறுத்துள்ளது.

இஸ்ரோ ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது அமைப்புகள், விண்வெளி முகமையைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கை மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பி, இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்குக் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தன.

இதனைத் தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை. இஸ்ரோ ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. அதன் முக்கியத்துவமும் எந்தக் காலத்திலும் குறையாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, தேசிய மற்றும் மூலோபாய திட்டங்கள், விண்வெளி அறிவியல் ஆய்வுகளில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து செயல்படும்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு என்பது இஸ்ரோவின் பங்கைக் குறைப்பதற்காக அல்ல என்றும், நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களைச் சந்தைப்படுத்துவதில் தனியார் துறை ஈடுபடும் போது, நாட்டின் அடுத்தகட்ட மேம்பட்ட விண்வெளி திட்டங்களில் இஸ்ரோ கூடுதல் கவனம் செலுத்த இது வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் விண்வெளித் துறையின் விரிவாக்கமே தவிர, தனியார்மயமாக்கல் அல்ல என்றும் இஸ்ரோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

‘எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்க முடியாது’ - இஸ்ரோ திட்டவட்டம்
தீபாவளி டிக்கெட் முன்பதிவு: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் நிறைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in