

எல்.முருகன் | கோப்புப்படம்
புதுடெல்லி: மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமாவிற்கு பாலிவுட் நடிகை புகார் காரணமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுபோல், மத்திய இணை அமைச்சரின் விலகல் பின்னணியின் மர்மங்கள் தொடர்கின்றன.
கடந்த வாரம் மத்திய செய்தி ஒபிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் திடீரெனப் பதவி விலகினார். வரும் ஏப்ரல் 2030 வரை எம்பி பதவிக்காலம் இருந்தும் அதையும் அவர் ராஜினாமா செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையின் மூன்றாவது ராஜினாமா இது. இதற்குமுன், ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
இதற்கு இருவரது எம்பி பதவிக்காலம் முடிவடைந்தது காரணமாக இருந்தது. ஆனால், இதுபோன்ற காரணம் இன்றி எல்.முருகன் ராஜினாமா செய்திருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அளித்த புகார் காரணமாகவே முருகன் ராஜினமா செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாலிவுட் நட்சத்திரம் ஒருவருக்கு அனுப்பப்பட்ட சில செய்திகளே முருகனின் வெளியேற்றத்திற்குக் காரணமாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஒருவர், தனக்கு வந்த பொருத்தமற்ற செய்திகள் குறித்து பிரதமர் மோடி அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் புகார் அளித்தாராம். அந்த அதிகாரி உடனடியாக இந்த விவகாரத்தை ஆளும் கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் கொண்டு சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி ஆகிய இரண்டில் இருந்தும் விலக முருகனுக்கு உத்தரவிடப்பட்டதாகத் தெரிகிறது.
டெல்லியின் ஒரு பழம்பெரும் ஆங்கில நாளேட்டில் வெளியான இந்த செய்தி, முன்னாள் அமைச்சர் முருகனின் விலகல் மர்மத்தை விளக்க முயற்சித்துள்ளது. எனினும், ரகசியம் இன்னும் முழுமையாக விலகியதாகத் தெரியவில்லை.