

புதுடெல்லி: இந்தியர்கள் அளித்த நன்கொடையால் 40 டன் மருந்துகளை ஈரான் தூதரகம் கொள்முதல் செய்திருக்கிறது. ஆனால் அவற்றை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் ஈரானில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 27,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போர் தீவிரமடையும் சூழலில் ஈரானில் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு மருந்துப் பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. ஈரானின் மஹன் ஏர் என்ற சரக்கு விமானம் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு மருந்துகளை கொண்டு சென்றது. சில நாட்களுக்கு முன்பு ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் இருந்து மஹன் ஏர் விமானம் இந்தியாவுக்குப் புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் அந்த விமானம் மிகக் கடுமையாக சேதமடைந்தது. இதனால் இந்தியாவில் இருந்து அர்மீனியா வழியாக ஈரானுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியர்கள் நன்கொடை: போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவு வதற்காக இந்தியர்கள் சார்பில் தாராளமாக நன்கொடை வழங்கப்பட்டு உள்ளன. இந்த நன்கொடைகள் மூலம் இந்தியாவில் மருந்துகளை வாங்க மத்திய அரசிடம் ஈரான் தூதரகம் அனுமதி கோரியது. மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக அதற்கு அனுமதி வழங்கியது. இதன்படி ஈரான் தூதரகம் சார்பில் சுமார் 40 டன் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் இந்த மருந்துகளை ஈரானுக்கு கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, "தற்போது இந்தியாவில் இருந்து 40 டன் மருந்துகளை கொள்முதல் செய்திருக்கிறோம். இது ஈரானுக்கு மிகவும் அவசிய தேவையாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களால் எங்களால் ஈரானுக்கு மருந்துகளை அனுப்பி வைக்க முடியவில்லை" என்றார்.