ஈரான் போர் தீவிரம்: பிரான்ஸ் அதிபர், மலேசிய பிரதமர், ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஈரான் போர் தீவிரம்: பிரான்ஸ் அதிபர், மலேசிய பிரதமர், ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published on

புதுடெல்லி: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பதற்றத்தைத் தணிப்பது, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்பது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இம்மானுவேல் மேக்ரோனுடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘மேற்கு ஆசியாவின் சூழல் குறித்தும், பதற்றத்தைத் தணிப்பதன் அவசரத் தேவை குறித்தும், இதற்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அணுகுமுறைக்கு திரும்புவது குறித்தும் எனது அன்பு நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பேசினேன்.

பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக எங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்பைத் தொடர ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘‘எனது நண்பரும் மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராஹிமுடன் உரையாடினேன். எதிர்வரும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகையை முன்னிட்டு அவருக்கும் மலேசிய மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

மேற்கு ஆசியாவில் நிலவும் கவலைக்குரிய சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம். மேலும், பேச்சுவார்த்தை மற்றம் தூதரக நடவடிக்கைகள் மூலம் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்கவும் எங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்’’ என தெரிவித்துள்ளார்.

ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘‘எனது சகோதரர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டேன். ஓமான் மக்களுக்கு முன்கூட்டியே ஈத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

பதற்றத்தைத் தணிப்பதற்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

ஓமனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியதை இந்தியா மீண்டும் கண்டித்தது. அதோடு, இந்திய குடிமக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு ஓமான் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா பாராட்டியது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு இந்தியாவும் ஓமனும் துணை நிற்கின்றன’’ என தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் தீவிரம்: பிரான்ஸ் அதிபர், மலேசிய பிரதமர், ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி ஆலோசனை
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி - 115 டாலராக அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in