

புதுடெல்லி: புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யும் கும்பல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் என். ராஜா என்பவர் முக்கியப் புள்ளியாக சி.பி.ஐ. வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
தன் மீதான சி.பி.ஐ. விசாரணையில் இருந்து தப்பிக்க, தொழிலதிபர் ராஜா டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரதீப் சிங்கை அணுகியுள்ளார். தமக்கு தெரிந்த உயர் அதிகாரிகள் மூலம் வழக்கைச் சாதகமாக முடித்துத் தருவதாக பிரதீப் சிங் அவருக்கு உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து நேரில் சந்தித்த போது, சி.பி.ஐ. விசாரணையில் தமக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி சாதகமான முடிவைப் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபர் ராஜாவிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் ஐ.பி.எஸ். அதிகாரி தீபக் கெஹ்லாவத்.
முதல்கட்டமாக தொழிலதிபர் ராஜா ஹவாலா பணப் பரிமாற்ற முறை மூலம் ரூ.1 கோடியைத் தயார் செய்து இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங்கிடம் கொடுத்துள்ளார். இதில் ரூ.50 லட்சத்தை, ஐ.பி.எஸ். அதிகாரி தீபக் கெஹ்லாவத்திற்கு இடைத்தரகர் மூலம் பிரதீப் சிங் கொடுத்து அனுப்பியுள்ளார். இதுகுறித்து ரகசியத் தகவலை அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரி உட்பட 5 பேரை கைது செய்தனர்.